புகாரளித்த மாணவியை பழிவாங்கும் வகையில் FIR கசிய விடப்பட்டுள்ளது - ஏபிவிபி அமைப்பு குற்றச்சாட்டு!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் அளித்த மாணவியை பழிவாங்கும் நடவடிக்கையாகவே விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு செயலிழந்து உள்ளதாக கூறி, திமுக என பெயரிடப்பட்ட உருவ பொம்மையை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வந்தனர்.
அதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ், திமுக அரசு முற்றிலும் செயலிழந்து இருப்பதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 4 நாட்களாகியும் குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
புகாரளித்த மாணவியை பழிவாங்கும் நடவடிக்கையாகவே அவரது விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல, சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு ABVP அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை வழங்க வலியுறுத்தினர்.