புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!
இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் இங்கிருந்து ஒரு மைக்ரோசாஃப்ட் அல்லது ஆப்பிள் போன்ற நிறுவனத்தை ஏன் உருவாக்க முடியாது? என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடியின் XTIC எனும் ஆராய்ச்சி மையத்தில் இந்தாண்டிற்கான மெய்நிகர் தொழில்நுட்ப இசையமைப்பாளர் விருது, ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் எனவும், புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதால் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.