புதிய படங்கள் குறித்து திரையரங்கு வளாகத்தில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!
திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள் குறித்து, தியேட்டர் வளாகத்தில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடைவிதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கூறுவதாக நினைத்து, சில யூடியூபர்கள் வன்மத்தைக் கக்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் நிலையில், யூடியூப்பில் அனைவரின் கருத்தாக கொண்டு செல்லப்படுவது தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, திரைப்படத்தின் மீது யூடியூபர்கள் வெறுப்பை விதைக்கக் கூாது எனவும், எனவே, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிட யூடியூபர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, கமல் நடித்த இந்தியன்-2, ரஜினி நடித்த வேட்டையன் மற்றும் சூர்யா நடித்த கங்குவா உள்ளிட்ட படங்களின் வசூலில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு வளாகத்தில் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.