புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி இடையே நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டபோது ஓட்டுநரின் இருக்கையின் பின்னால் உள்ள பெட்டியில் மதுபாட்டில்கள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்த 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தீயிட்டு எரித்தனர். மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை மற்றும் நடத்துநர் நல்லதம்பி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ள அதிகாரிகள், இருவர் மீதும் துறை ரீதியான சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.