புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு! : குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 19 ஆயிரம் போலீசார், ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை கடலில் குளிக்கவும், இறங்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு இரவில் சென்னை முழுவதும் 425 இடங்களில் வாகன தணிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை,
முக்கிய சாலைகளில் வாகன பந்தயத்தை தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் அனுமதி பெற்றே புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், அனுமதி இன்றி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.