நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் - தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக் குழுவினர், பார்க்க சென்றனர். இந்த சிறப்புக் காட்சிக்காக திரையரங்கில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியிருந்தனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஹைதராபத்தில் உள்ள இல்லத்தில் இருந்த அல்லு அர்ஜூனை போலீசார் விசாரணைக்கு அழைத்துசென்றனர். இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பள்ளி நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜூனாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் கணவர் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூனா தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அவசர மனுவாக விசாரித்த நீதிமன்றம் அல்லு அர்ஜூனாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. .இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த நீதிமன்றறம், குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் சுமத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியது.