பூட்டானில் உருவாகும் Gelephu Mindfulness நகர் - சிறப்பு தொகுப்பு!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூட்டான், ஒரு மெகா திட்டத்தில் இறங்கியுள்ளது. உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போலல்லாமல் ஒரு முன்மாதிரி ZERO CARBON பகுதியாக Gelephu Mindfulness City உருவாக்கப் பட்டு வருகிறது. அதென்ன Mindfulness City ? இந்த திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது ? இந்தியாவுக்கு இதனால் என்ன லாபம் கிடைக்கும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1907ம் ஆண்டு முதல் பரம்பரை மன்னராக உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில், பூட்டான் தனது 117வது தேசிய தினத்தை கடந்த டிசம்பர் 17ம் தேதி கொண்டாடியது. தலைநகர் திம்புவில், தனது தேசிய தின உரையில், Gelephu Mindfulness City என்ற புதிய நகரத்திற்கான திட்டங்களைப் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் அறிவித்தார்.
சிறப்பு நிர்வாகப் பகுதி என்று அழைக்கப்படும், புதிய நகரம், அதன் சொந்த அரசை கொண்டிருக்கும் என்றும், சொந்த சட்டத்தை உருவாக்குவதற்கான சுதந்திரத்தையும், கொண்டிருக்கும் என்றும், அதற்கென ஒரு தனி நீதித்துறையையும் கொண்டிருக்கும் என்று பூடான் மன்னர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் 500 ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தொடர்ந்து பயனளிக்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்றும் பூட்டான் மன்னர் உறுதியளித்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கட்டிடக் கலைஞர்கள் உட்பட ஏராளமான திறமையான பூட்டான் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமையை பெறுகின்றனர். அதை தடுக்கவும், உள்நாட்டு வாய்ப்புக்களை உருவாக்கவும் இந்த புதிய நகரம் உருவாக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது ஒரு நகரம் என்று அழைக்கப்பட்டாலும், மிகப்பெரியதாக 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. பூட்டானின் மொத்த பரப்பளவில் சுமார் 2.5 சதவீதமாகும். சொல்லப்போனால் பூடானின் தலைநகர் திம்பு 26 சதுர கிலோமீட்டர் தான்.
பூட்டானில் முதன்முதலாக, அமைக்கப்படும் சிறப்பு நிர்வாகப் பகுதி இதுவாகும். ஒரு தேசிய பூங்கா மற்றும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகிய இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்நகரத்தில் அமைக்கப்படுகிறது.
இந்நகரில், சொந்த பல்கலைக்கழகம், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருத்துவத்துக்கான சுகாதார வசதிகள் இருக்கும் என்றும், பல வணிக சந்தைகள் மற்றும் ஆன்மீக மையங்கள் இந்நகரில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நகரத்தைச் சுற்றி முப்பத்தைந்து ஆறுகள் மற்றும் நீரோடைகள் ஓடுவதாகவும், அதிலிருந்து நீர் மின் திட்டம் மற்றும் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நகரம், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ளடக்கிய ஒரு பொருளாதார மையமாகும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்நகரம் கட்டமைக்கப் படவுள்ளது. இந்த நகரத்துக்கென்று அதன் சொந்த சர்வதேச விமான நிலைய கட்டுமானம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்த நகரம் முழுவதுமாக பூட்டானின் மொத்த தேசிய மகிழ்ச்சியின் தத்துவத்தை அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்நகரில் உள்ள மக்கள் இயற்கையோடும், பல்லுயிர் பெருக்கத்தோடும் வாழ்வார்கள் என்றும், இந்த திட்டத்தை 'மொத்த தேசிய மகிழ்ச்சி 2.0' என்று அழைப்பதாகவும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும், Gelephu Mindfulness City தெற்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்த சமதளமான, போக்குவரத்து உள்கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்படுகிறது இந்த நகரம்.
எல்லையோர நகரங்களை ரயில் பாதைகளுடன் இணைக்கவும், பூடானுக்குச் செல்லும் முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், இந்நகர் நாட்டின் மற்ற நகரங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது.
பொருளாதார மண்டலமாக அமைக்கப்படும் இந்த திட்டம், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் வங்காள விரிகுடா பகுதியுடன் பூடானை இணைக்கும் திட்டமாகும்.