பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்டத் திருத்த மசோதா - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார்.
மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது எனக்கூறிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டிய அவசியம் எனவும் கூறினார்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணையின்றி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனக்கூறிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கி வருகிறது என குறிப்பிட்டார்.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றும், சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.