பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை - பேரவையில் மசோதா நிறைவேற்றம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
மத்திய சட்டங்களில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை அதிகமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மீது விவாதம் நடைபெற்றது.
மசோதாவுக்கு திமுக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில்,
முதலமைச்சர் கொண்டு வந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுத நாளில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் நடப்பாண்டு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில் சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.