பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை - விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது :
பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும் அரசியலை கண்டு பயமில்லை என்று தெரிவித்தார். கவனமாகத்தான் களமாட வேண்டும் என்றும்
வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
"பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை, தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை! என்றும் விஜய் தெரிவித்தார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தங்கள் நிலைப்பாடு எனறும், யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.
ஊழல் மலிந்த அரசியல்தான் தவெக-இன் எதிரி என்றும், நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக்கொண்டு கூடுதல் சுமையாக வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்துள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். சினிமாவில் கோடிக்கணக்கில் வாங்கும் ஊதியத்தை தவிர்த்து விட்டே அரசியலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திராவிட மாடல் என்று கொள்ளையடிக்கும் கூட்டம் தான் த.வெ.க.வின் அரசியல் எதிரி என்றும், குடும்ப அரசியல் செய்து ஊழல் செய்யும் ஆட்சி தான் திமுக ஆட்சி எனவும் விமர்சித்தார். பிளவுவாத சக்திகளும், ஊழல் கபடதாரிகளுமே த.வெ.க.வின் கொள்கை ரீதியான எதிரிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் கூத்தாடி என்பதா? என கேள்வி எழுப்பிய அவர், ம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற தலைவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை சுட்டிக்காட்டினார்.
"