பேஜர் வெடிகுண்டு பாணி : இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ரகசிய திட்டம்? - சிறப்பு கட்டுரை!
இந்தியா மீது மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ( ISI ) ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேல் பேஜர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது போல் பாகிஸ்தானும் புதுவகையில் தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிக எண்ணிக்கையில் ராணுவ ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) இருப்பை தங்கள் படையில் அதிகரித்து வருகின்றன.
இரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளன. கூடவே எதிரியை கண்காணிப்பது, உளவு பார்ப்பது மற்றும் இலக்குகளை குறிவைத்து தாக்குவது போன்ற திறன்கள் அடங்கிய (ட்ரோன்) தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியும் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆசியாவின் மூன்று அணுசக்தி கொண்ட நாடுகளாகும். மூன்று நாடுகளும் தங்கள் ராணுவத் திறனை வேக வேகமாக மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களைத் தயாரிப்பதில் மூன்று நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டி போடுகின்றன.
ராணுவத்தில் பெரிய அளவில் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், போர் முறை மாறியுள்ளது. ஏதேனும், மோதல் ஏற்பட்டால், ட்ரோன்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இஸ்ரேலின் "பேஜர் வெடிகுண்டு" சதித்திட்டத்தைப் போலவே, இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்காக, சீனாவில், உயர் தொழில்நுட்ப, துல்லியமான ஆயுதங்களை வழங்கும் திறன் கொண்ட ஒரு நெட்வோர்க்கை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. மேலும், ட்ரோன் உதிரிபாக தயாரிப்பாளர்களைத் தெற்காசியாவில் தேட தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முக்கியமான அரசு, ராணுவம் மற்றும் பொருளாதார வணிக மையங்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ISI தொடர்புடைய உளவு அமைப்புகள் திட்டமிட்டுளளதாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களைக் குறிவைத்திருக்கிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு முகமைகள் முக்கியமான உள்கட்டமைப்புகளைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றன. மேலும், இந்திய உளவுத்துறை ட்ரோன் உதிரிபாக விநியோகஸ்தர்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தியாளர்கள் மீதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்தியா தயாராகி வருவதால், சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கும்பமேளா நடைபெறும் இடங்களும், ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் மிக வலிமையானது என்பதால், பாகிஸ்தானின் தீவிரவாத சதி திட்டங்கள் முன்பு போல் எடுபடாது என்றே ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.