செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பேரிடர் ராஜதந்திரம் : புவி சார் அரசியலில் - இந்தியா அபார ஆட்டம்!

08:05 PM Apr 07, 2025 IST | Murugesan M

பேரிடர் ராஜதந்திரத்தில், உலக அளவில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. மற்ற நாடுகளுக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவிகள், சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதோடு, புவிசார் அரசியலில் தன்னை விஸ்வ குருவாக நிலைநிறுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

கடந்த வாரம், அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கத்தால், மியான்மர் பேரழிவைச் சந்தித்துள்ளது. செய்தி அறிந்ததும், உடனடியாக ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கிய, இந்தியா, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.

சுதந்திரத்துக்குப் பின்பு பேரிடர் மேலாண்மை முறையாக இல்லாத நிலையிலும், பிற நாடுகளுக்குத் தேவைப்படும் போதெல்லாம், தன்னால் இயன்ற மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வந்திருக்கிறது.  உதாரணமாக, சீனாவிலிருந்து அகதிகளான திபெத் மக்களுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியது. கடுமையான சூறாவளி,புயல் வெள்ளம் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களைக் காப்பாற்றியது. பல ஆண்டுகாலமாக, இலங்கையில் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு இந்தியா உதவியது.

Advertisement

என்றாலும், சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட,  பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. 2001- ஆம் ஆண்டில், தான் முதல்வராக இருந்த காலத்தில் தான், பிரதமர் மோடி, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை  முதல்முறையாகக் குஜராத்தில் கொண்டு வந்தார்.

குஜராத் அரசைப் பின்பற்றி அப்போதைய மத்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்தச்சூழலில், இந்தியப் பெருங்கடலில்  சுனாமி உருவாகி, ஆசியா முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்தது.   இக்கட்டான அந்த நேரத்தில், இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்த நம்பகமான முதல் நாடாக இந்தியா இருந்தது.

குறிப்பாக, சுனாமியால் அதிகம் பாதிக்கப் பட்ட, இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை முதலில் அடைந்து, தீவிர மீட்புப் பணியில் இந்தியக் கடற்படை வீரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  2014ம் ஆண்டில், நாட்டை பேரிடர் தாங்கும் தன்மை கொண்டதாக மாற்றவும், உயிர் இழப்பைக் குறைக்கவும், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார். இது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தேசியத் திட்டமாகும்.

உலகம் முழுவதும் பேரிடர்களின் போது விரைந்து செயலாற்றுவதாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய உள்கட்டமைப்புக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்தது. தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் தலைமையில்,  பேரிடர் மீள் கட்டமைப்புக்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் , 48 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

பேரிடர் காலங்களில், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்துள்ளது. 2015ம் ஆண்டு, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியா ஆபரேஷன் மைத்ரியைத் தொடங்கியது.  முதல் சர்வதேச  மீட்புக் குழுவாகக் களத்தில் இறங்கியது. இதன்பிறகு தான், இந்தியாவின் பேரிடர் மீட்புப் பணிகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

2023ம் ஆண்டில், நிலநடுக்கத்தால் பேரழிவைத் துருக்கி  சந்தித்த போது, இந்தியா அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது. அனுப்பியது. முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் துருக்கி அதிபர் எர்டோகன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறுப்பைக் காட்டாமல், பெருந்தன்மையாகத் துருக்கிக்கு இந்தியா உதவிகளை வழங்கியதை உலகமே பாராட்டியது. காலநிலை மாற்றம், பேரழிவு அபாயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே வரும் காலங்களில், உலக அளவில் மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மட்டும், தெற்காசியாவில் 87 மில்லியன் மக்களுக்குப் பேரிடர் நிவாரணம் தேவைப்படும் என்று ஐநா சபை மதிப்பிட்டுள்ளது. உலகளவில், பல மில்லியன் மக்கள் பேரிடர் ஆபத்தில் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலை எதிர்கொண்டு, பேரிடர் மேலாண்மையிலும் மீட்பு நிவாரணப் பணிகளிலும்  இந்தியா  முன்னணியில் உள்ளது. மனிதாபிமான உதவியின் மூலம் பிறநாடுகளுடனான உறவுகளையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

இப்படி, இந்தியாவின் பேரிடர் ராஜதந்திரம், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றிக்கும் உதவுகிறது.     " வையத் தலைமை கொள் " என்ற மகா கவி பாரதியின் சொல்லுக்கு ஏற்ப, உலகளாவிய சக்தியாக இந்தியா, உருவெடுத்துள்ளது.

Advertisement
Tags :
MAINஇந்தியாDisaster Diplomacy: India's Great Performance in Geopolitics!புவி சார் அரசியல்FEATURED
Advertisement
Next Article