பொங்கல் பண்டிகை - விருதுநகரில் உணவுத்திருவிழா!
விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது.
விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற தலைப்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
சுமார் 56 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளூர் முதல் சர்வதேச அளவிலான மிகவும் பிரபலமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அதேபோல வளரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டி முன் தங்களது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
உணவுத் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பிடித்த உணவுகளை உண்டு ரசித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.