பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் - ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். பெரும்பாலும் தமது சொந்த கார்கள் மூலம் பொதுமக்கள் சென்னை திரும்புவதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்ட போதிலும், ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கனரக வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.