பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!
ஆவடியில் சிறப்பு காவல்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் புதுபானையில் பொங்கலிட்டு நாற்று நட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
Advertisement
சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை மைதானத்தில், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த மைதானம் அங்கீகரிக்கப்பட்ட கிராமமாக மாற்றப்பட்ட நிலையில், விழாவில் சிறப்பு விருந்தினராக டிஜிபி சங்கர் ஜிவால் மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.
அப்போது, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்து காவல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கிணற்றில் தண்ணீர் எடுத்தும், நாற்று நட்டுவைத்தும் பொங்கலை கொண்டாடிய அவர், கயிற்று கட்டிலில் அமர்ந்து விழாவை கண்டுரசித்தார்.
இதனை அடுத்து, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் காவலர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.