பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்றக் கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி!
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisement
மதுரை விளாங்குடியில் அதிமுக கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்ததாகவும், பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே இடத்தில் திமுக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளதாகவும், அதிமுக-விற்கு மட்டும் பாரபட்சமாக கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எதிர் மனுதாரராக தமிழக காவல்துறை தலைவரை சேர்க்க உத்தரவிட்டார்.
மேலும் பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழகத்தில் கொடி கம்பங்கள் வைக்கப்பட்ட இடங்களில் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது?
இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.