பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் - சீமான் பேட்டி!
பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement
கடலூர் மாவட்டம் வடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற பிரச்சனைகளை திசை திருப்பவே ஆளுநருக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக சாடினார்.
வெறும் ரூ.103 செலவில் மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்றும், விழித்துக் கொள்ளாவிட்டால் நெற்றியில் ஒரு ரூபாயை ஒட்டிவிடுவார்கள் என்றும் கூறினார்.
அடுத்த 2 நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாதக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் சீமான் தெரிவித்தார்.
பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிற போது அது பற்றி கேள்வி எழுகிறது. மொழியிலிருந்துதான் எல்லாமே பிறக்கிறது. ஆனால் அந்த மொழியையே சனியன், காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார்.
உங்களின் தமிழன்னை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார் எனப் பெரியார் கேட்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? என சீமான் கேள்வி எழுப்பினார்.
திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.