பொறுப்புத் துணை வேந்தர் - நீக்கப்பட்ட பதிவாளர் இடையே உச்சகட்ட மோதல்!
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பதிவாளரின் அறை உடைக்கப்பட்டு புதிய பதிவாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தர் சங்கர், பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் இடையே மோதல் உருவானது. இதனை அடுத்து இருவரும், ஒருவரை ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டனர்.
புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவி ஏற்பார் என துணைவேந்தர் சங்கர் அறிவித்த நிலையில், அதற்கு பணி நீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் தியாகராஜ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பதிவாளரின் அறையை தியாகராஜன் பூட்டிய நிலையில், வெளி கதவை துணைவேந்தர் சங்கர் பூட்டினார்.
இதனை தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறை கதவுகள் உடைக்கப்பட்டு புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், தம்மை பதிவாளராக தொடருமாறு தலைமை செயலர் தொலைபேசி வாயிலாக தெரிவித்தாக கூறினார்.
மேலும், பதிவாளர் அறைக்கு செல்லாமலேயே, பணியை தொடர்வேன் என அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பொறுப்புத் துணைவேந்தர் சங்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நியமன முறைகேடு தொடர்பான வழக்கு வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.
முறைகேடு வழக்கில் தியாகராஜன் பெயர் உள்ளதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.