For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போபால் விஷவாயு விபத்து - 40 ஆண்டுகளுக்கு பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம் - சிறப்பு தொகுப்பு!

08:00 PM Jan 04, 2025 IST | Murugesan M
போபால் விஷவாயு விபத்து   40 ஆண்டுகளுக்கு பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்   சிறப்பு தொகுப்பு

போபால் விஷவாயு விபத்து நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைட் தொழிற்சாலை தளத்தில் இருந்து நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த விஷவாயு விபத்து வரலாற்றின் கருப்பு பக்கமாக இன்றும் நினைவில் நிற்கிறது. இது உலகின் மிக மோசமான தொழில்துறை விபத்துக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Advertisement

1984ம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மீதைல் ஐசோசயனேட் விஷ வாயு கசிந்தது.

இந்த கோர விபத்தில் அப்பாவி பொதுமக்கள் 5,479 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். விஷவாயு தாக்கத்தின் காரணமாக நோயுற்று பின்னாளில் பலர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் கண்பார்வை இழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தீவிரமான மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement

விபத்துக்கு பின்னர், யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலை மூடப்பட்டது. எனினும், பல டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தன. இந்த நச்சுக் கழிவுகளில், 162 மெட்ரிக் டன் மண், 92 மெட்ரிக் டன் செவின் மற்றும் நாப்தால்கள், 54 மெட்ரிக் டன் பாதியளவு பதப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் 29 மெட்ரிக் டன் அணு உலை கழிவுகள் உள்ளன.

இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதாக அதிகாரிகளைக் கண்டித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், போபாலில் உள்ள யூனியன் கார்பைட் தளத்தின் நச்சுக் கழிவுகளை 4 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில், போபாலில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட 12 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் அளவிலான நச்சுக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன. காவல்துறை பாதுகாப்பு, ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள் குழுக்கள், தீயணைப்புப் படை பிரிவுகள் என மொத்தம் 25 வாகனங்கள் உடன் சென்றன.

நச்சுக் கழிவுகளைச் ஏற்றிச் சென்ற 12 கண்டெய்னர் லாரிகளும், இடையில் எங்கும் நிற்காமல், தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழிற்பேட்டையை அடைந்தன. இந்த கண்டெய்னர் லாரிகள் செல்வதற்காக பிரத்யேக பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

நச்சுக் கழிவுகளை பொட்டலம் கட்டும் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 30 நிமிட ஷிப்டுகளில் சுமார் 100 பேர் கழிவுகளை லாரிகளில் அடைத்து ஏற்றிச் சென்றதாகவும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை இயக்குனர் ஸ்வதந்த்ர குமார் சிங் தெரிவித்துள்ளார்.

எரிக்கும் போது, எரியூட்டியிலிருந்து வரும் புகை, நான்கு அடுக்குகள் கொண்ட சிறப்பு வடிகட்டிகள் வழியாகச் வெளியேற்றப்படுவதால் காற்று மாசுபடாது என்று கூறப்பட்டுள்ளது.

நச்சுத் தனிமங்களின் தடயங்கள் மிச்சமில்லை என்பது உறுதிசெய்யப்பட்டவுடன், சாம்பல் இரண்டு அடுக்கு முறையில் மூடப்பட்டு, மண்ணுடனும் தண்ணீருடனும் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாதவாறு புதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுக் கழிவு அகற்றும் பணி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. இந்த கழிவுகளை அங்கு எரித்து அகற்ற 150 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே, 2015ம் ஆண்டு பிதாம்பூரில் சோதனை அடிப்படையில் 10 டன் யூனியன் கார்பைடு கழிவுகள் எரிக்கப்பட்டதாகவும், அதன் பின் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மண், காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சுமார் 1.75 லட்சம் மக்கள் வசிக்கும் ஊரில், யூனியன் கார்பைட் கழிவுகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏராளமான பொதுமக்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

Advertisement
Tags :
Advertisement