போராட்டத்திற்கு முன்பே கைது செய்கிறது காவல்துறை - பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் குற்றச்சாட்டு!
பொதுவெளியில்போராட சென்றால் போராட்டத்திற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்வதாகவும்,எனவே இல்லங்களிலேயே கருப்பு உடை அணிந்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் கருப்பு புடவை கட்டியும், கண்களில் கருப்பு துணி கட்டியும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்தின் முன்பு பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் கருப்பு புடவை அணிந்து, கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், பெண்ணின் தகவல்களை கசிய விட்ட தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத், தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தலைசிறந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் காவல்துறை பாதுகாப்பு போடாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் ஜனநாயகம், பேச்சுரிமை இல்லையா என வினவினார்.
அண்ணா பல்கலைக் கழக சம்பவத்தால் பெண்கள் வெளியே வர அச்சப்படுவதாக கூறிய அவர், தமிழக அரசுக்கு எதிராக அடுத்த வாரமும் ஒரு போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.