ப்ரெஷ் உணவில்லாமல் தவிப்பு : விண்வெளியில் உணவு சவாலை சமாளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - சிறப்பு கட்டுரை!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 160 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் பிரஷ்ஷான உணவு கிடைக்காததால் பழைய உணவை சூடு பண்ணி சாப்பிடுகிறார்கள். விண்வெளியில் உணவு சவாலை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி சென்றார். அவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த பட்ச் வில்மோரும் சென்றார். இருவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் பணிகளை முடித்தபின் பூமிக்கு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னையால், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனால், இருவரும், விண்வெளி நிலையத்தில் தங்கள் ஆராய்ச்சி பணிகளைத் தொடர்வார்கள் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புவார்கள் என்றும் நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்ய அடிக்கடி வந்து போகும் ஒரு வீடாகும். விண்வெளி நிலையத்தில் ஐந்து படுக்கையறைகள் உள்ளன. இதில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தங்க முடியும். மேலும் இந்த விண்வெளி நிலையத்தில், பார்வையாளர்களுக்கு என்று ஒரு தனி அறையும் உள்ளது.
பாதுகாப்பான இடமாக உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்,விண்வெளி வீரர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கவும் வசதியுள்ளது.
பொதுவாக, விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள், பழைய கால வழக்கப்படி உறைந்த உணவுகளையே சாப்பிடுவார்கள். சேமித்து வைக்கப் பட்ட பழ வகைகளைச் சாப்பிடுவார்கள். சராசரியாக ஒரு மூன்று மாதங்கள் வரை பழங்கள் கெடாமல் இருக்கும். மேலும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மீண்டும் விண்வெளி நிலையத்துக்குள் கொண்டு வர, மூன்று மாதங்கள் வரை ஆகும் என்கிறார்கள் விண்வெளி வல்லுநர்கள்.
இந்நிலையில், விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் , புட்ச் வில்மோரும், உணவு தானியங்கள், பால், வறுத்த கோழி மற்றும் இறால் காக்டெய்ல், பீட்சா என சுவையான உணவுகளையே சாப்பிடுகின்றனர். பூமியில் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த உணவுகள் அனைத்தும் விண்வெளி நிலையத்தை அடைந்தவுடன் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள்.
மேலும் தங்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிக்கக்கூடிய தண்ணீராக மாற்றிக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. இந்த விண்வெளி வீரர்களின் ஊட்டச் சத்து அளவை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும், உறைந்த மற்றும் உலர்ந்த உணவு பொருட்களையே நம்பியுள்ளனர். இருவரும் ஒரு நாளைக்கு 1.7 கிலோ உணவை உட்கொள்வதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இது அவர்களின் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸின் உடல் எடை குறைந்துள்ளது என்ற தகவல் ஊடகங்களில் பரவியது. தான் உடல் எடையை குறைப்பதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்திகளே என்று வீடியோ வெளியிட்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், மைக்ரோ கிராவிட்டி காரணமாக , தலை மற்றும் உடல் பகுதிகள் சற்று பெரியதாக தோன்றுகிறது என்றும் விளக்கமளித்திருக்கிறார்.
இந்த சூழலில் , சுனிதா வில்லியம்ஸ் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் உறங்கும் முறைகளைக் கண்காணிப்பதற்கான அற்புதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
விண்வெளிப் பயணம் என்பது தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை சீர்குலைப்பதாக அறியப் படுகிறது. இந்த விளைவுகளை புரிந்துகொள்வதும், குறைப்பதும் விண்வெளி வீரர் ஆரோக்கியம் மற்றும் பணி வெற்றிக்கு முக்கியமானதாகும்.
விண்வெளியில் உள்ள விஞ்ஞானிகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து நாசா கண்காணித்து வருகிறது. எனினும், விண்வெளியில் உணவு சவாலை நாசா எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வி மட்டும் மிஞ்சி இருக்கிறது.