மகன் பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதில் அதிகாரிகள் தாமதம் - மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தந்தை போராட்டம்!
மகனின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து தரக்கோரி தந்தை காரைக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தனி நபராக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisement
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது மகன் சுகதேவ் வேலைக்காக சிங்கப்பூர் சென்ற நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பித்த அவருக்கு, பிறப்பு சான்றிதழில் தேதி மாற்றம் இருந்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி தனது தந்தை காளிமுத்துவிடம் சுகதேவ் கூறிய நிலையில், அவர் மாநகராட்சி அலுவல்கத்தில் முறையிட்டுள்ளார்.
அப்போது அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடி இதற்கு தீர்வு காண அறிவுறுத்திய நிலையில், காளிமுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மகனின் பிறப்பு சான்றிதழில் தேதி மாற்றம் செய்துதர உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் பிறப்பு சான்றிதழில் தேதி மாற்றம் செய்து தரக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 4 மாதங்களாக அலைந்தும் தனது மகனின் பிறப்பு சான்றிதழில் தேதி மாற்றம் செய்து தரவில்லை எனக்கூறி, காளிமுத்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தனி ஆளாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.