மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணையாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்த அவர், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் உட்பட 10 மாவட்டங்களில் 77 கோடி ரூபாய் செலவில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என தெரிவித்தார்.
உயர்கல்வி படிப்போருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறினார்.
மூன்றாம் பாலினத்தவர்கள் ஊர் காவல் படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிட்ட அவர், சென்னை, தாம்பரம், ஆவடியில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து மூத்த குடிமக்களுக்காக அன்பு சோலை எனும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.