மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பயணிகள், உடனடியாக ரயிலை நிறுத்தி கீழே இறங்கி தப்ப முயன்றனர்.
அப்போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிலையில், அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதே போல் ரயில் விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.