மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்து வந்த பாதை - சிறப்பு கட்டுரை!
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்.....
யார் அடுத்த முதல்வர் ? மஹாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் கேள்வி இதுதான்.! ஒருவேளை திராவிடக் கட்சிகள் ஆளும் மாநிலமாக இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு தாத்தா, அப்பா, மகன், பேரன் என்று வரிசையாக வாரிசுகளுக்கு முதல்வர் பட்டத்தை சூட்டியிருக்கலாம்.
அதுதான் ஜனநாயகம் என்றும் சொல்லி மக்களையும் ஏமாற்றலாம். ஆனால் மகாராஷ்டிரா 'இந்துத்துவம்' என்ற தத்துவ அரசியலை மேற்கொள்ளும் மாநிலம் ஆயிற்றே? இங்கு தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி, ஆட்சியில் கூட்டணி இல்லை என்ற நிலைமையெல்லாம் கிடையாது.
கூட்டணியின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி கொடுத்து கவுரவிக்கும் அரசியல் பண்பு இங்கு பின்பற்றப்படுகிறது. அதுதான் முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம். இந்த சூழ்நிலையிலும் அடுத்த முதல்வராக 'இவர்' வந்தால் நன்றாக இருக்கும் என்று பா.ஜ.க வட்டத்தில் மட்டுமில்லாது பொதுமக்கள் மட்டத்திலும் ஒரு பெயர் தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த மந்திரப் பெயர் 'தேவேந்திர ஃபட்னாவிஸ்'
யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்..?
1970ம் ஆண்டு நாக்பூரில் பிறந்தவர் தேவேந்திர ஃபட்னாவிஸ். இவருடைய தந்தை கங்காதர் ஃபட்னாவிஸ் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இதனால் சிறுவயது முதலே தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவருக்கு ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தொடர்பு கிடைத்தது. சங்கத்திடமிருந்து நம் நாட்டின் உண்மையான வரலாறு, கலாச்சார மேன்மை, அந்நியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி முதலியவற்றை தெளிவாக புரிந்துக்கொண்டதால்,சிறு வயதிலேயே தாய் நாட்டின் வளர்ச்சிக்காக முழுவதுமாக தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதி அவருக்குள் பிறந்தது.
அது.. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருந்த நேரம். தேவேந்திர பத்நாவிஸ் தந்தை கங்காதர், அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியதால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அந்த நேரத்தில் 'INDIRA CONVENT' என்ற பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தேவேந்திர ஃபட்நாவிஸ். ஒரு சர்வாதிகாரியின் பெயரில் இயங்கும் பள்ளியில் இனி நான் படிக்கமாட்டேன் என்று அப்போதே அங்கிருந்து வெளியேறினார். அந்த சிறுவயதில் அவர் காட்டிய நெஞ்சுரம் சக மாணவர்களையும் ஈர்த்தது. அவர்களும் தங்களால் முடிந்த வகையில் எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கினர்.
பிறகு பல்வேறு பள்ளிகளில் படிப்பை முடித்தவர், சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். அவர் சட்டக்கல்லுரியில் படித்த காலத்திலேயே ஏ.பி.வி.பி என்ற தேசிய மாணவர் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதன்மூலம் கிடைத்த அரசியல் அனுபவம் அவரை நாக்பூர் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வைத்தது.
இதன் மூலம் மகாராஷ்டிரா அரசியலிலேயே குறைந்த வயதில் மேயரான இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார் ஃபட்னாவிஸ். தொடர்ந்து 1999ம் ஆண்டு நடைபெற்ற நாக்பூர் சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. இதன் மூலம் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். அவர் அதோடு நிற்கவில்லை. தனது துடிப்பான பேச்சு மூலம் மகாராஷ்டிரா முழுவதும் தேசிய கொள்கையை அவர் கொண்டு சேர்த்து பாஜகவை வலுப்படுத்தத்தொடங்கினார்.
அதன் எதிரொலி..? 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த வெற்றியில் ஃபட்னாவிஸ் பங்களிப்பை உணர்ந்து அவரையே முதல்வராக அறிவித்தது டெல்லி பா.ஜ.க மேலிடம்.
முதல்வராக நாற்காலியில் அமர்ந்ததும், பதவி போதையில் மூழ்காமல் மக்களுக்கான திட்டங்களை யோசித்து செயல்படுத்துவதில் மும்முரமானார். மும்பை நகரத்தை சர்வதேச பொருளாதார நகரமாக மாற்றும் 'மும்பை நெக்ஸ்ட்', காவல்துறையை நவீனமாக்கும் 'போலீஸ் டிஜிடைசேஷன்' போன்ற திட்டங்களை கொண்டுவந்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) என்ற திட்டத்தை கொண்டு வந்து சட்ட ஒழுங்கை சீர் செய்தார். பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு நிர்வாகத்தில் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட CM fellowship பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஆதரவற்றவர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கியது மக்களின் இதயத்தை தொட்ட ஒரு திட்டமாகும்.
இந்தியாவின் நாடித்துடிப்பாக உள்ள கிராமங்களையும் அவர் மறக்க வில்லை. விவசாயிகளுக்காக மாநிலம் முழுவதும் குளம் வெட்டுவது, கடன் தள்ளுபடி போன்ற முக்கிய திட்டங்களையும் கொண்டுவந்தார்.
இப்படி நல்ல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டே இருந்தால் எதிர்க்கட்சிகள் சும்மா விடுவார்களா? அவர்கள் பிழைப்பு கெட்டுவிடுமே? வழக்கம் போல மக்கள் பிரச்சனையில் தங்களுடைய பிரிவினைவாத கோஷத்தையும் இணைத்து அரசியல் செய்யத்தொடங்கினர்.
அதாவது மகாராஷ்டிராவில் பல சமூகங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தாலும், அதில் சில சட்ட சிக்கல்கள் இருந்தன. இதை பயன்படுத்திக்கொண்டு, சம்மந்தப்பட்ட சமூகங்களை 'மராட்டிய இனம்' என்று முத்திரை குத்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்ற போராட்டத்தை அறிவித்தனர்.
மகாராஷ்டிராவில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாதா என்றும், பிற மாநில மக்கள் மீது வெறுப்பை பரப்பும் பிரச்சாரங்களையும் முன்வைத்தன. இதை செய்த கட்சிகளில் பிரதானமானவை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆகும்.
விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட சமூகங்களுக்கு முந்தைய அரசாங்கத்தால் ஏற்கனவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமூகங்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்? என்ற கேள்விக்கு முந்தைய அரசாங்கம் தெளிவான தரவுகளை தயார் செய்து வைத்திருக்கவில்லை. விளைவு? பாம்பே உயர்நிதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது. எதிர்க்கட்சிகள் தங்கள் கையாலாகாத்தனத்தால் கோட்டை விட்டதை, சாமர்த்தியமாக பா.ஜ.க மீது பழிபோட்டது.
இதையே தங்களுக்கு சாதமாக எடுத்துக்கொண்டு, மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் கலவரத்தை தூண்டத் தொடங்கியது. ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்கெல்லாம் ஃபட்னாவிஸ் அஞ்ச வில்லை. முந்தைய அரசு செய்துவிட்ட குழப்பத்தை நிரந்தமாக சரி செய்வதற்கு ஒரு குழுவை அமைத்தார்.
அதன்மூலம் இட ஒதுக்கீடு தேவைப்படும் சமூகங்களின் வாழ்வியல் குறித்த தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டது. அதை மையப்படுத்தி 2018ம் ஆண்டு இட ஒதுக்கீட்டை மக்களுக்காக மீட்டுக்கொடுத்தார் ஃபட்நாவிஸ்.
இதைத்தொடர்ந்து ஃபட்னாவிசுக்கான ஆதரவு மேலும் கூடியது. 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க-சிவசேனா கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மீண்டும் ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், யாருமே எதிர்பார்க்காத திருப்பம் நடந்தது. நான்தான் முதல்வராவேன் என்று போர் கோடி உயர்த்தினார் உத்தவ் தாக்கரே.
கொஞ்சம் பொறுத்துப்போயிருந்தால் பா.ஜ.க புதிய ஆலோசனைகளை வழங்கியிருக்கும். ஆனால் அதற்குள் பா.ஜ.க முதுகில் குத்திவிட்டு, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார். இதனால் அங்கு அமைந்திருந்த பா.ஜ.க ஆட்சி கவிழ்ந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகள் குழப்பமான சூழ்நிலையே மகாராஷ்டிராவில் நிலவியது. இந்த நேரத்தில் உத்தவ் தாக்கரே மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நம்பிக்கை இழந்தனர். தீவிர இந்துத்துவ வாதத்தால் பால் தாக்கரே வளர்த்த கட்சியை, தனது சுயநலத்திற்காக உத்தவ் தாக்கரே பயன்படுத்துகிறார் என்பதை அவர்கள் புரிந்துக்கொண்டனர்.
இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பாலான சிவா சேனா எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தனர். அந்த கொள்கை முடிவை பாராட்டும்படி, முன்னாள் முதல்வராக இருந்தும் ஈகோ காட்டாமல் ஷிண்டேவை முதல்வராக முன்நிறுத்தி ,துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஃபட்னாவிஸ்.
அடுத்து 2024ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணியை தேர்ந்தெடுத்ததன் மூலம் கொள்கை மற்றும் உழைப்புக்கு மட்டுமே எங்கள் ஆதரவு. குடும்பத்திற்கும், சுயநலத்திற்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை மக்களும் உணர்த்திவிட்டனர்.
தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிலையில், பதவிகளை எதிர்பார்த்து அவர் கட்சியில் இல்லை. இந்துத்துவ கொள்கையால் வார்க்கப்பட்ட அவர் என்றுமே தன்னை ஒரு மக்கள் சேவகனாகவே கருதி பணியாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை