மகாராஷ்ரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ் - ஏக்னாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி!
மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் பொறுப்பேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதலமைச்சரை தேர்வு செய்வதில் கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை மும்பை ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸ் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது ஃபட்னாவீஸ் முதலமைச்சராவதற்கான ஆதரவு கடிதத்தை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், இன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.