மகா கும்பமேளா : 'ஒரு தட்டு - ஒரு பை' திட்டம் அறிமுகம்!
மகா கும்பமேளாவில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக 'ஒரு தட்டு - ஒரு பை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அடுத்த மாதம் மஹா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26ஆம் தேதி வரை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 7 கோடி பேர் புனித நீராடிய நிலையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆத்யநாத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மகாகும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில், ஒரு தட்டு - ஒரு பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு துணியிலான பை மற்றும் எவர்சில்வர் தட்டு வழங்கப்படுகிறது.