மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு - சிறப்பு கட்டுரை!
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்று வரும் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பர் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும், ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் நாள்தோறும் பல லட்சம் பேர் பிரயாக்ராஜ் வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கங்கை - யமுனை நதிக்கரையில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவில் மகா கும்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளது.
45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கானோர் வருகை தருவதால் கழிவு மேலாண்மையை கையாள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது.
நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவையும், 240 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும் கையாள்வது சாதாரண செயல் அல்ல. அந்த பணிக்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR என்ற சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு அதிநவீன WASHING MACHINE என்று சொல்லலாம். ஆனால் துணிக்கு பதிலாக மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணியை HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR செய்கிறது.
அதே போல் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றுவதற்காக GEOTUBE TECHNOLOGY என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக BIOREMEDIATION என்னும் முறையும் பின்பற்றப்படுகிறது. பெரிய குளங்களில் கழிவுநீரை சேமித்து நுண்ணுயிர்கள் மூலம் அவற்றை தூய்மைப்படுத்துவதே BIOREMEDIATION.
கும்பமேளாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழாயிரம் கோடி ரூபாயில் கழிவு மேலாண்மைக்காக மட்டுமே ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக 316 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரம் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகளை காத்தல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தடுத்தல் போன்ற பணிகளுக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கழிவு மேலாண்மையில் மனிதர்களின் பங்களிப்பை வெகுவாக குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாபெரும் ஆன்மிக விழாக்களை தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக மகாகும்பமேளா மாறியிருக்கிறது. கழிவு மேலாண்மையில் இந்திய தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன மகாகும்பமேளாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.