மகா கும்ப மேளா! : மிகப் பிரம்மாண்டமாக தயாரான கூடார நகரம்!
உத்தரப்பிரதேசத்தில் வரும் 13ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெற உள்ள மகா கும்ப மேளாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரயாக்ராஜில் மகா கும்ப நகர் என்னும் தற்காலிக கூடார நகரம் அமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
மகா கும்ப மேளா உலகின் மிக பெரிய அளவிலான இந்து திருவிழாவாகும். ஹரித்வார், பிரயாக்ராஜ், ,உஜ்ஜையினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் கும்ப மேளா திருவிழா நடத்தப் படுகிறது. என்றாலும் பிரயாக்ராஜ் நடக்கும் கும்ப மேளா தான் சிறப்பானதாக கருதப் படுகிறது.
மிக அதிக அளவிலான மக்கள் ஒன்று கூடும் பிரம்மாண்ட திருவிழாவாக, கும்ப மேளா யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொண்டாடப்படும் மகா கும்ப மேளா, மகர சங்கிராந்தி தொடங்கி, மகா சிவராத்திரி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மகா கும்ப மேளாவில், சுமார் 40 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்ப மேளாவுக்கு வரும்,பக்தர்கள் தங்குவதற்காக, மிக பெரிய அளவில் கூடார நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வாரணாசியில் கங்கை நதிக்கரையிலும், அயோத்தியிலும் கூடார நகரம் உருவாக்கிய லல்லுஜி அண்ட் சன்ஸ் நிறுவனமே மகா கும்ப மேளாவுக்கும் கூடார நகரம் உருவாக்கி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த நிறுவனமே கும்பமேளாவுக்கான கூடார நகரம் அமைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த கூடார நகரத்தில், அடிப்படை வசதிகள் முதல் ஆடம்பரமான தங்குமிடங்கள் வரை அனைத்தும் உள்ளன.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான கூடாரங்களுடன் இந்த புதிய நகரம் கட்டப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தங்க முடியும் என்று கூறப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ள இந்த கூடார நகரத்தில், 300க்கும் மேற்பட்ட மிதவைகளைக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த முறை 3,200 ஹெக்டேர் பரப்பளவில் மகா கும்ப மேளா நடக்கிறது. இது கடந்த கும்பமேளாவை விட 800 ஹெக்டேர் அதிகமாகும். அதே போல் கடந்த கும்பமேளாவை விட இந்த ஆண்டு, வடிவமைக்கும் பொருட்களின் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த கூடார நகரம் உருவாக்க சுமார் 68 லட்சம் மரக் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரக் கம்பங்களின் ஒட்டுமொத்த நீளம், பிரயாக்ராஜ் மற்றும் வாஷிங்டன் இடையேயான தூரத்தை விட 20,726 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். 100 கிலோமீட்டர் துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. கூரைகள் அமைப்பதற்கு 250 டன் காகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கூடார நகரத்தை உருவாக்க,பல மாதங்களாக நாள்தோறும் மூன்று ஷிப்டுகளில் 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உழைத்துள்ளனர்.
45 நாட்கள் தான் மகா கும்ப மேளா நடக்கும் என்றாலும், திருவிழா முடிந்ததும், கட்டமைப்புகளை அகற்றுவதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் ஆகும். பொதுவாக கூடார நகரத்தை அமைப்பதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என்ற நிலையில் இந்த ஆண்டு எதிர்ப்பாராமல் பருவமழை நீடித்த காரணத்தால் அதிக நாட்கள் ஆகியுள்ளன.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குப் போட்டியாக நவீனமயமாக இந்த கூடார நகரம் உள்ளது.
நவநாகரிக படுக்கையறைகள், பளிங்கு தரை, நவீன கழிப்பறைகள், மரத்தினால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள், DTH connections, heaters, Wi-Fi, போன்ற வசதிகள் பிரீமியம் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. யமுனை நதிக்கரையில் கடுமையான குளிர் இருக்கும் என்பதால், எண்ணெய் ஹீட்டர்கள், கடினமான துணிகள் மற்றும் மின்சார போர்வைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
துறவிகள், சன்னியாசிகள் தங்குவதற்காக தனியாக 10,000 கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவர்கள் தார்பாயால் மூடிய வடிவில், எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான அமைப்பில் வடிவமைத்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல், 56 காவல் நிலையங்கள் மற்றும் 144 கட்டுப்பாட்டு சாவடிகள், மற்றும் தற்காலிக நிர்வாக அலுவலகங்களும் உருவாக்கப் பட்டுள்ளன.
மகா கும்ப மேளா இந்தியாவின் வேத பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.