மகா கும்ப மேளா விழா : சுமார் 3000 கோடி வர்த்தகம்? - சிறப்பு கட்டுரை!
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இந்த ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கிறது. சுமார் 3,000 கோடி ரூபாய் அளவிலான ஒரு மெகா பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகளையும் மகா கும்ப மேளா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
நாட்டின் பண்பாடு மற்றும் ஆன்மீக அடையாளத்தை பறைசாற்றும் திருவிழா தான் கும்ப மேளா. கங்கை,யமுனை,சரஸ்வதி நதிகளின் சங்கமம் தான் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமம் மிகப் புனிதமான இடமாகும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் தான் கும்ப மேளா நடக்கிறது. நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதில், இந்த கும்ப மேளா முக்கிய பங்காற்றுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழா கருதப்படும் கும்பமேளாவால் பல ஆயிரம் கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்ப மேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில், 5500 கோடி மதிப்பிலான 176 உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், பிரதமர் மோடி, மகா கும்ப மேளாவுக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த பிரம்மாண்ட இந்திய ஆன்மீகத் திருவிழாவுக்கான பிரத்யேக செயலியையும் பிரதமர் மோடிஅறிமுகப்படுத்தினார். ( KUMBH sah AI yak ) ) இந்த செயலி, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் செயல்படும். இது மகா கும்ப மேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழிகாட்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தி ஆங்கிலம் தமிழ் உட்பட 15 இந்திய மொழிகளில் செயல்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த கும்ப மேளாவை விட இந்த ஆண்டு மகாகும்ப மேளா வெகு சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் என்று தெரிய வருகிறது. 2019 ஆம் ஆண்டில் 25 கோடி பக்தர்கள் கும்ப மேளாவுக்கு வந்திருந்தனர். இந்த ஆண்டு மகா கும்ப மேளாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டை விட 20 சதவீதம் பெரியதாக இந்த ஆண்டு, 4,000 ஹெக்டேர் பரப்பளவில், மகா கும்ப மேளா நடக்கிறது. மகா கும்ப மேளா மைதானம் 25 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 1.6 லட்சம் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. விரிவாக்கப்பட்ட இந்த கூடார நகரம் , கடந்த முறையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. 2019 ஆம் ஆண்டு 22 ஆக இருந்த பாண்டூன் பாலங்களின் எண்ணிக்கை இந்த மகா கும்ப மேளாவுக்காக 30 ஆக உயர்ந்துள்ளது.
திருவிழா நடக்கும் பகுதிகளில், சுமார் 400 கிலோமீட்டர் தற்காலிக சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டை விட இது 35 சதவீதம் அதிகமாகும். மகா கும்ப மேளா நடைபெறும் இடம் முழுவதும் தெருவிளக்குகளின் எண்ணிக்கை 40,000 லிருந்து 67,000 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.
மேலும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, இரண்டு துணை மின் நிலையங்களையும் 66 புதிய மின்மாற்றிகளையும் உத்தரபிரதேச அரசு பிரத்யேகமாக அமைத்துள்ளது.
கும்ப மேளாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்குவதற்காக, 1,249 கிலோமீட்டர் தூரத்துக்கு பைப் இணைப்புக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 200 WATER ATM கள் மற்றும் 85 WATER BOOTHகள் அமைக்கப் பட்டுள்ளன. இதுவே சென்ற கும்ப மேளாவில், 1049 கிலோமீட்டர் தூரத்துக்கு 10 WATER ATM கள் வைக்கப் பட்டிருந்தன.
சுகாதார மற்றும் கழிவு நீர் தேவைக்காக மொத்த 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 2000 தூய்மைக் குழுக்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 20,000 கையுறைகள் மற்றும் முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மகா கும்ப மேளாவுக்காக 20,000 மேற்பட்ட ஊழியர்கள்பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், பானை செடிகளைப் பயன்படுத்தி பசுமை சூழல் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு மகா கும்ப மேளாவை , பசுமை மேளாவாக மாற்ற, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு மாநில அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தெருக் கலை மற்றும் சுவரோவியங்களுக்கான பரப்பளவு 17 லட்சம் சதுர அடியில் இருந்து 18 லட்சம் சதுர அடியாக இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 550 சிறு பேருந்துகளும் 7,000 புதிய பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், 9 சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகா கும்ப மேளாவுக்கு சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி பயணிகள் ரயிலில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 3,134 சிறப்பு ரயில்கள் உட்பட சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த மகா கும்ப மேளா, சுமார் 12,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி தந்தது. அடுத்து 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளா திருவிழா, ஒட்டு மொத்தமாக 1.2 லட்சம் கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது.
45 நாட்கள் நடைபெறவுள்ள மகா கும்ப மேளாவில், சர்வதேச நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக மட்டும் 3,000 கோடி ரூபாய் செலவழிக்க உள்ளன. HUL, Coca-Cola, ITC, Bisleri, Parle, Dabur, Paytm மற்றும் Emami போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பொருட்களையும் சேவைகளையும் சந்தை படுத்த உள்ளன. புதிய மின்சார வாகனங்கள் உற்பத்தி நிறுவனங்களும் இந்த மகா கும்ப மேளாவில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
2024-25 மாநில பட்ஜெட்டில் மகா கும்ப மேளாவுக்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. கூடுதலாக 2,100 கோடி சிறப்பு மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், பல்வேறு துறைகளில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை கும்ப மேளா உருவாக்கியது. இம்முறை அதை விட அதிகமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆழ்ந்த அர்த்தத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு, புனித நதிகளில் நீராடி தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பைப் பக்தர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.