மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் - சிறப்பு கட்டுரை!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்ன? மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஐந்தே மாதத்தில், எப்படி இப்படி ஒரு வரலாற்று வெற்றியை மகாராஷ்டிராவில் பாஜக பெற்றது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் மற்றும் 3 அரசுகளை மகாராஷ்டிரா கண்டது. இரண்டு பெரிய மாநிலக் கட்சிகளில் பிளவு உண்டானது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் உடைந்தது. உத்தவ் தாக்கரேவின் சிவா சேனாவும் உடைந்தது. எதிர்பாராத இந்த சம்பவங்களால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடு பிடித்தது. கடந்த 30 ஆண்டுகளாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மகாயுதி கூட்டணியில், ஆளும் பாஜக தலைமையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. அதேசமயம் மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகள் போட்டியிட்டன.
ஆட்சியமைக்க 145 இடங்களே தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணி 230க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 130க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 85 சதவீததுக்கும் மேலான வெற்றி விகிதத்தையும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 73 சதவீத வெற்றி விகிதத்தையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 80 சதவீத வெற்றி விகிதத்தையும் பெற்றுள்ளன.
இதற்கு நேர்மாறாக, வரலாற்று சிறப்பு மிக்க தோல்வியாக இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் மீதான மக்களின் அதிருப்தியையும் வெறுப்பையுமே காட்டுகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்டிராவின் 48 மக்களவை தொகுதிகளில் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தன் தேர்தல் வியூகத்தை மாற்றியது.
தேர்தலில் பாஜகவுக்கு வலிமை சேர்க்கும் விதமாக, ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், வீதி வீதியாக சென்று சத்தமின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜக வலுவில்லாத பகுதிகளில் நேரடியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், தேசியத்தை பற்றியும் தேச நலனுக்கு பாஜக செய்யும் நலத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிராமங்கள் மற்றும் ஒவ்வொரு வார்டிலும், ஏகப்பட்ட கூட்டங்கள் நடத்தி, அரசியல் சூழ்ச்சியால், தேசம் எப்படி பலவீனமடைந்து வருகிறது என்பதை தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில், உத்தர பிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத், இந்துக்களாகிய நாம் பிளவு பட்டால் அழிக்கப்படுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்தார். அதனை மாற்றி பிரதமர் மோடி, ஒன்றிணைந்தால் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
OBC சமூகத்தை MADHAV ஃபார்முலா மூலம் தக்க வைத்திருக்கும் பாஜக, மாலி, தங்கர் மற்றும் வஞ்சாரி சமூகங்களை ஒன்றிணைத்தது. இதனால், மகாராஷ்டிராவில் சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த விடாமல் பாஜக பார்த்துக் கொண்டது.
ஓபிசி ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய பாஜக, மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கையால் ஏற்பட்ட நஷ்டத்தையும் சரிகட்டி ஒரே கல்லில் இரண்டு மாங்காயைத் தட்டியது. 4.6 கோடி பெண் வாக்காளர்கள் உள்ள மகாராஷ்டிராவில் , லட்கி பஹின் யோஜனா என்னும் பெண் சக்தி திட்டத்தால், பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்துவிட்டது பாஜக கூட்டணி.
ஏற்கனவே, இந்த திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 1.85 கோடி பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த தொகையை, 2,100 ரூபாயாக உயர்த்துவதாக பாஜக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
அடுத்து விவசாயிகளுக்காக, பருத்தி பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கொள்முதல் செய்வதாகவும், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 15 சதவீதம் வரை ஈரப்பதம் தாங்கும் திறன் கொண்ட சோயாபீன்களை கொள்முதல் செய்வதாகவும் பாஜக அறிவித்தது.
இது மட்டுமின்றி, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) Klaus Schwab கிளாஸ் ஸ்வாப், மும்பையை 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், சர்வதேச அளவில் மும்பை ஒரு முக்கிய நிதி மையமாக வளர, உதவுவதாகவும் ஷ்வாப் உறுதியளித்தார். இது பாஜகவின் வளர்ச்சி திட்டங்களுக்கு அத்தாட்சியாக அமைந்தது.
மக்களுக்கான அரசியல் செய்யும் பாஜக, மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியது . மாறாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள். மக்களவை தேர்தலில் வாக்களித்த மக்களை மறந்து விட்டு, தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
இந்தியாவின் அரசியல் மாற்றத்துக்கான மக்கள் ஆதரவு, மகாராஷ்டிராவில் இருந்துதான் தொடங்கும் என்று சொல்லப் படுவதுண்டு. பிரதமர் மோடி முன்வைத்த ‘ஒன்றிணைந்தால் பாதுகாப்பு’ என்ற முழக்கம், மகாராஷ்டிரா மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. சாதிய பாகுபாடுகளை கடந்து, இந்தியாவுக்காக, அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இனி, இந்தியாவுக்கு எதிரான உள் நாட்டு -வெளிநாட்டு சக்திகள் தங்கள் சுய லாபத்துக்காக பிரித்தாள முடியாது என்பதையே மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.