மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்
வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை சாலிகிராமம் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர்ப் பந்தலை திறந்து வைத்து தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பிரேமலதாவுக்கு அவரது மகன் விஜய பிரபாகரன் இனிப்பு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தேமுதிக துணை செயலாளரும், அவரது சகோதரரும் எல்.கே.சுதீஷ் தனது குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், சென்னை மாவட்டச் செயலாளர் பழனி, முக்கனிகளைச் சீர்வரிசையாக எடுத்து வந்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தமக்கு எந்த விழாவும் வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளதாகவும், தேமுதிக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பிறந்த நாள் விழாவை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.