மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை - பலத்த பாதுகாப்பு!
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரின் ஜிர்பாம் மாவட்டத்தில் மீண்டும் குக்கி, மெய்தேய் மக்களிடையே இன வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள அரமாய் தெங்கோல் பகுதியில் கடந்த திங்களன்று புகுந்த கிளர்ச்சியாளர்கள், மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட 6 பேரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், மணிப்பூர் மீண்டும் சில இடங்களில் போராட்டம் வெடித்தது.
லாம்லாய், சாலோ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு தந்து அமைதி காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது