மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் - முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!
மணிப்பூர் பற்றி எரிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்தான் காரணம் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் குற்றம்சாட்டினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கூடுதலாக 5,000 துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினால் தான் அங்கு அமைதி திரும்பும் என கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரேன் சிங், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அலட்சிப்போக்கால் தான் மணிப்பூரில் தற்போது வன்முறை ஏற்பட்டதாகவும், அப்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம்தான் இந்தப் பிரச்னைக்கு அடிநாதம் என குற்றம்சாட்டினார்.
மியான்மரில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் தாங்க் லியான் பாவ் கைட் என்பவரை மணிப்பூருக்குள் ப. சிதம்பரம் அனுமதித்து, பிரச்னைக்கு வழிவகுத்ததை பிரேன் சிங் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டார்.