மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பும் ஏற்பட்டது. மழையின் தாக்கம் குறைந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.