மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!
மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் கிடப்பில் போட்டது ஏன் என பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தன்பாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டதாக கூறிய ஜெ.பி. நட்டா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் காங்கிரஸ் செயற்குழுவில் எத்தனை ஓபிசிக்கள் இருக்கிறார்கள் என ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார். அத்துடன், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் 27 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டோரை உயர்த்த பாஜக அரசு கடுமையாக பாடுபடுவதாகவும் நட்டா குறிப்பிட்டார்.
இதேபோல பழங்குடியின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பாஜக ஆட்சியில் பட்ஜெட்டில் மூன்று மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வதையும் அவர் மேற்கோள்காட்டினார்.