மதுரையில் காவலர் கொலை வழக்கு : தப்பியோட முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!
மதுரையில் காவலர் கொலை வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது தப்பியோட முயன்ற குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர்.
Advertisement
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி பாதி எரிந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த காவலர் மலையரசன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூவேந்தர் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தருக்கும், காவலர் மலையரசனுக்கும் மது குடிப்பது போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், மலையரசன் வங்கிக் கணக்கில் அதிகளவில் பணத்தை இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து எரித்ததாகவும் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூவேந்தரைக் கைது செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காவலரைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற மூவேந்தரை காவல்துறை சுட்டுப் பிடித்தனர்.
காலில் காயமடைந்த மூவேந்தர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மூவேந்தரின் நண்பர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.