மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!
மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா திமுக அரசு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாகச் செயல்படும் திமுகவை, உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தைக் காக்க, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தடை விதித்த திமுக அரசு, தமிழகம் முழுவதும் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் திமுகவினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
நாட்டின் சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு, வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசு, இதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.