மதுரையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
மதுரை மாநகரில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளதால், பிரதான சாலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.
மதுரையில் ஒரேநாளில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. 15 நிமிடங்களில் மட்டும் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மதுரை மாநகரே ஸ்தம்பித்துபோகும் அளவு தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளநீரால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளநீர் அதிக அளவு உள்ளதால், மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததால் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததுடன், நீர்நிலைகளையும் தூர்வாரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கொந்தளித்தனர்.