மதுரை அருகே தனியார் நிறுவன நிர்வாகி கடத்தல் - 5 பேர் கைது!
மதுரை அருகே நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் காரை சுற்றிவளைத்த போலீசார், அதில் பயணம் செய்த 5 பேரை விரட்டி பிடித்தனர்.
பசுபதி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திருச்சியைச் சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவன விற்பனை மேலாளரான தேவா என்பவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்தபோது, அவர் கூறி ஆசை வார்த்தைகளை நம்பி நியோமேக்ஸ் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளார்.
நியோமேக்ஸ் நிறுவனம் முடங்கியதால், தேவாவை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, தாமும் பணத்தை இழந்ததாக அவர் கூறியதாகவும், அவரது ஆலோசனைபடி நண்பர்களுடன் சேர்ந்து நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியான கார்த்திகேயனை கடத்தியதாவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணத்தை பெற்று கொண்டு திண்டுக்கல் அருகே கார்த்திகேயனை இறக்கிவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், காரில் இருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.