மதுரை அழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
மதுரையிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு அழகர் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மிகவும் புகழ் பெற்ற தலமாகும்.
Advertisement
அழகர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, 2 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகப் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.
தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்ல மூங்கில் கட்டும் பணியும் முடிவடைந்த நிலையில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
கும்பாபிஷேகத்துக்காக அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து சாந்தி பூஜையுடன், யாகச் சாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.
மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. திருக்கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக யாகசாலைக்குத் தீர்த்தக்குடங்களை எடுத்துச் சென்றனர்.
யாக சாலையில் 8 யாகக் குண்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 160 புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் திருக்கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 -க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளைத் தொடங்கினர். வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், இன்று காலை யாகக் குண்டங்களில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுரத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய நீர், 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என விண்ணைப் பிளக்க பக்தி முழக்கமிட்டனர்.
அழகர் கோவிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு இங்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.