மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் - போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவிப்பு!
மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலத்தை காலிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
Advertisement
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து கிராம மக்களை கட்டுப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாலை முதலே அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்ணெண்ணெய் கேன்களை கையில் ஏந்தி, தண்ணீர் தொட்டி மீது ஏறி கிராமமக்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே தமிழ்நாடு அரசு மூர்க்கமாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் திமுக அரசு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து குடியிருப்புகளை காலிசெய்ய 23ம் தேதி வரை அதிகாரிகள் கால அவகாசம் வழங்கிய நிலையில், கிராம மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், சாலையிலேயே உணவு சமைத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.