மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரம் -சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை!
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக மதுரை சின்ன உடைப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், மாவட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மறுவாழ்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்த நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.