மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - பாஜக குற்றச்சாட்டு!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மத்திய அரசின் திட்டத்தை கருணாநிதி கைவினை திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விமர்சித்துள்ள பாஜக, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சமூக நீதிக்கு தாங்கள்தான் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக சுயநலத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் கரு.நாகராஜன், விஸ்வகர்மா திட்டத்தை புரிந்துகொள்ளாதது போல் திமுக அரசு நடிக்கிறது என குற்றம் சாட்டினார்.
அதேபோல், விஸ்வகர்மா திட்டமும், கருணாநிதி கைவினை திட்டமும் ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், வழக்கமாக அனைத்து திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போல் விஸ்வகர்மா திட்டத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக விமர்சித்தார்.
அதேபோல் திமுக அரசின் செயலுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கருணாநிதி கைவினை திட்டத்தில் சேரமுடியும் என திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், இளைஞர்களுக்கான வாய்ப்பை தமிழக அரசு மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் பயன்பெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், எல்லாவற்றுக்கும் அண்ணா மற்றும் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்பதே இவர்களது திட்டம் என விமர்சித்தார்.