மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் - பிரதமர் மோடி
மத்திய அரசின் பிரகதி வலைதளம் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Advertisement
மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகதி வலைதள செயல்பாடு குறித்த ஆய்வை,
கேட்ஸ் அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி மேற்கொண்டது.
பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த களஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடியின் நேரடி பங்கேற்பு, பிரகதி வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு பிரகதி வலைதளம் உதவியாக அமைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுவதாகவும்,
சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த உதவுவதாகவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவு 32 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைய இந்த வலைதளம் உதவுவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் பிரகதி வலைதளம் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரகதி வலைதளம் மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாகவும், பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.