மத்திய பட்ஜெட் விண்வெளித் துறைக்கு 1000 கோடி ஒதுக்கீடு ஏன்?
விண்வெளித் துறையில் மேலும் முன்னேற்றங்களை அடைவதற்காக , மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பாதையில் இந்த நிதி நிலை அறிக்கையில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது விஷயங்களுக்கு முன்னுரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன.
ஏற்கெனவே, சர்வதேச அளவில், விண்வெளித் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், விண்வெளி மேலும் பல சாதனைகளைப் புரிவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
விண்வெளி துறையில் நவீனமயமான வளர்ச்சியை அடைவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 180-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை ஆதரிப்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
18 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், ஒன்பது ஏவுகணை செயற்கைக்கோள்கள், ஐந்து அறிவியல் செயற்கைக்கோள்கள், மூன்று வானிலை செயற்கைக்கோள்கள் மற்றும் 20 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட 55 செயற்கை கோள்களை விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இவை, தகவல் தொடர்பு முதல் வானிலை முன்னறிவிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வரை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு பயன்தருகின்றன
இந்தியாவின் இந்த விண்வெளிச் சொத்துக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகவும் துணை புரிகின்றன.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPAce) விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் அங்கீகாரம் வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வரை, IN-SPACe எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துக்கு 300க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களிடமிருந்து 440 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அரசின் அங்கீகாரம், ஆதரவு ஆலோசனை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வசதி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன இந்த நிறுவனங்கள்.
இதற்கிடையில், அரசு சாரா நிறுவனங்கள் 51 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மற்றும் 34 கூட்டு திட்ட செயலாக்க திட்டங்களில் விண்வெளி நடவடிக்கைகளில் IN-SPACe உடன் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதரவை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளை இந்த ஒப்பந்தங்கள் மேம்படுத்துகின்றன.
அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், அரசின் இந்த ஒதுக்கீடு, இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட்அப் தளத்தில் புதியவர்கள் வர உதவும் என்றும் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா தன ஆதிக்கத்தைச் செலுத்தவும் துணைசெய்யும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை ஐந்து மடங்கு அதிகரிப்பதற்கான மத்திய பட்ஜெட்டின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாக இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், இதனால்,நாட்டில் வளர்ந்து வரும் விண்வெளி ஸ்டார்ட்அப்களை மேலும் வேகமாக வளர்ச்சி பெறும் என்றும் இந்திய விண்வெளி சங்கத்தின் (ISpA) இயக்குநர் ஓய்வு பெற்ற ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பட் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் 12 தொழில்துறை பூங்காக்களை நிறுவப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் விண்வெளிதுறைக்கான தொழில்நுட்ப பூங்காவும் இடம் பெறவும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளித்துறைக்கான 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு , துணிச்சலான மூலதன நிதியை ஏற்படுத்துவதற்கான திட்டம் என்று அறியப் படுகிறது. இந்த ஒதுக்கீடு விண்வெளி தொழில்நுட்பத்தில் மேலும் பல முன்னேற்றங்கள எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிதியானது உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியா தன் முத்திரையைப் பதிப்பதற்கு உதவும் என்றும் விண்வெளி துறை ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறையில் தனியார்நிறுவனங்களின் பங்களிப்பை கூட்டும் என்றும் எதிர்பார்க்க படுகிறது.
அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை வேகப் படுத்தவும், விண்வெளிதுறையில் வலிமையான வெற்றியைத் தொடர்வதற்கும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.