சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் இருப்பதாகவும், இன்னும் பல பெண்கள் நீதிபதிகளாக வர வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், அனிதா சுமந்த், மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், மார்ச் 8-ம் தேதி மட்டுமல்ல, அனைத்து நாட்களும் மகளிர் தினம் தான் எனத் தெரிவித்தார். உயிர்களின் ஆதாரமாக இருக்கும் நீரைப்போல் மனிதம் வளர பெண்களே முக்கிய காரணம் எனப் புகழாரம் சூட்டிய அவர், தடைகளை கடந்து பெண்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டால் சமூகம் முன்னேறும் என்றும் குறிப்பிட்டார்.