மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் குடும்பத்தினர் உதவி கேட்டு கொடுத்த மனுவை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 18ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன் சென்ற அமைச்சர் சேகர் பாபு, நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது உயிரிழந்த பாகன் உதயகுமாரின் 2 பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, மனு இல்லாமலே உதவி செய்வோம் எனக்கூறி அவர்களிடமே மனுவை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் யானைப் பாகன் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.