மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி
எவ்வளவு தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Advertisement
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் டி.ஜி.பி ரவி மற்றும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
3 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி ரவி, உடலைப் பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெயில் காலத்தில் பெண்கள் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
உடலில் உப்புச்சத்து குறைந்ததால்தான் திரைப்பட நடிகர் புரூஸ்லி இறந்ததாகக் கூறிய அவர், உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் மன அழுத்தம் இல்லாமல் இருந்ததால்தான் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரிவித்தார். உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பு என்று தெரிவித்த அவர், 50 வயதைக் கடந்தோர் கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், உலகம் முழுவதும் கிட்னிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நோய்கள் வரும் எனக் கூறினார்.
உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டதால் பல நோய்கள் வருகிறது என்றும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கே.எஸ்.ரவிக்குமார் அறிவுறுத்தினார்.