மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!
மயிலாடுதுறையில் தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும் ஆதீனங்களில் முக்கியமானது மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக 48 ஆண்டுகள் அருளாட்சி செய்தவர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் அஷ்டமி திதி அன்று பரிபூரணம் எய்தினார். அவரது பூதவுடல் ஆதீன மடத்தின் அருகில் ஸ்ரீஆனந்த பரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டு, தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் விமான வடிவில் குரு மூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலைமுதல் ஆதீனத்தில் திருமுறை பாராயணம், சமய சொற்பொழிவு, சிந்தனை அரங்கம், திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
குரு மூர்த்தத்தில் நடைபெற்ற விழாவில், ஆதீனத்தின் தற்போதைய குரு மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, குருமூர்த்த ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து சிறந்த சைவப் பணியாற்றிய ஓதுவார் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.